Monday, August 20, 2007

கோடம்பாக்கம் கற்பனை கல்வி நிலையம்

தனது அறையில் மும்முறமாக வேலை செய்து கொண்டிருந்த சி.கணேசன் அவர்கள், ஏதோ சத்தம் கேட்டு நிமிர்ந்து நுழைவாசலை பார்த்தார். அங்கு ஜெ.கணேசன் நின்று கொண்டிருந்தார்.
"பிரின்ஸிபாலை பார்க்கனும்" என்று வாசலில் இருந்த உதவியாளரிடம் அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது...
"கணேசா! உள்ளே வாப்பா. நீ பாட்டுக்கும் உள்ளே வரவேண்டியது தானே? ஏன் வெளியே நின்னுக்கிட்டு பெர்மிஷன்லாம் கேட்கிறே" என்றார் சி.கணேசன்.
"இல்லை. என்னதான் நாம்ப நண்பர்களாக இருந்தாலும், இந்த இடத்துல நீங்க பிரின்ஸிபால், நான் உங்க கிட்ட பணிபுரியற ஒரு ஆசிரியர். அதான்" என்று ஜெ.கணேசன் இழுத்தார்.
"அட பரவாயில்லைபா. நீ எப்போ வேணும்னாலும் என் அறைக்கு வரலாம். சரி. உங்க வகுப்பு மாணவர்களை பத்தி ஒரு ரிப்போர்ட் கேட்டேனே? ரெடியா?"
"இருக்குங்க. சொல்றேன் கேளுங்க. முதல்ல, என் வகுப்பு மாணவர்களெல்லாம் ரொம்ப தங்கமானவங்க. திறமைசாலிங்க. என்ன, ஆளாளுக்கு ஒரு தினுசா இருப்பாங்க அவ்வளவுதான்"
"தெரிஞ்ச விஷயம் தானே"
"ஆமாங்க. உதாரணத்துக்கு, ரஜினிகாந்த்னு ஒரு தம்பி இருக்குது. அதுங்கிட்ட இந்திய வரைபடத்தை கொடுத்து சென்னையில கோட்டை எங்கேயிருக்கு, டெல்லி செங்கோட்டை எங்கேயிருக்குன்னு கேட்டா, அந்த தம்பி வெறும் இமயமலையை மட்டும் காட்டுது. மீதியெல்லாம் எங்கேயிருக்குன்னு எனக்கு தெரிஞ்சிகிறதுல ஆர்வமில்லைன்னு சொல்லிட்டு அப்படியே மேலாக்க எங்கியோ பார்த்துகினு உட்கார்ந்துக்குது"
"(சிரிப்புடன்) அந்த தம்பி எப்பவும் அப்படித்தான். ரொம்ப அமைதி. அப்படியே விடு. தொந்தரவு பண்ணாதே.
"அதெல்லாம் பண்ணுவேனா. அப்புறம் கமல்ஹாசன்னு ஒரு தம்பி இருக்கு. ரோமியோ ஜூலியட் காதலை அப்படியே தமிழ்ல சொல்லுன்னா, 'அவன் அவளை உற்று உற்று நோக்க, உற்று நோக்கும்போதெல்லாம் கற்றயாவும் இற்று இற்று போக, அவன் ஒரு நிர்மூலமான நிலைக்கு கிறங்கி செல்ல'ன்னு ரொம்பவே தூய தமிழ்ல சொல்ல ஆரம்பித்தது. நானே கொஞ்சம் ஆடித்தான் போயிட்டேன்"
"எல்லாத்துலேயும் ஒரு பெர்பெக்ஷன் கேட்கிற தம்பி அது. அதும்போக்குலே விட்டுடு"
"சரி விட்டுட்டேன். அப்புறம் விஜயகாந்த்னு ஒரு தம்பி. அறத்துப்பாலில் இருந்து ஒரு குறள் சொல்லுன்னுதான் கேட்டேன். உடனே அந்த தம்பி 'தமிழ் புத்தகத்துல மொத்தம் இருநூறு பக்கம். அதுல செய்யுளுக்கு ஐம்பது பக்கம், உரைநடைக்கு நூற்றைப்பது பக்கம். செய்யுள்ள இருக்கிற ஐம்பது பக்கத்துல, இருபத்தைந்து பக்கம் ஒற்றைபடை எண்கள்ல முடியுது. பாக்கி இருபத்தைந்து பக்கம் இரட்டைபடை எண்கள்ல முடியுது'ன்னு ஒரே புள்ளி விவரமா சொல்ல ஆரம்பிக்குது. குறளை சொல்லவைக்கிறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுது"
"அந்த தம்பியும் அப்படித்தான். ரொம்ப நல்ல தம்பி. விட்டுடு"
"அது சரி. அப்புறம் அஜித்துன்னு ஒரு தம்பி. நீர், நிலம், காற்று பத்தி எழுதுங்கிற கேள்விக்கு, 'நான் யார் கிட்டயும் பேஸ் மாட்டேன். எதுவும் எழுதமாட்டேன்னு" சொல்லுது.
"பரவாயில்லை. இப்ப வர்ற ரெண்டு மூணு பரீட்சையில அந்த தம்பிக்கு நல்ல மார்க்கு வந்தா எல்லாம் சரியாயிடும்"
"அப்புறம் விஜய், சூர்யான்னு ரெண்டு பேருங்க அடிக்கிற லூட்டிதான் தாங்க முடியலை"
"அப்படியா என்ன பண்றாங்க?"
"எப்போ பார்த்தாலும் விஜய், பக்கத்துல இருக்கிற வடிவேலு டீக்கடைக்கு போயிடுது. கேட்டா 'நான் தான் அழகிய தமிழ் மகன். ஆனா எனக்கு சொந்த ஊரு சிவகாசி. அது வெடிக்கிற இடம், இது அடிக்கிற இடம்னு' டயலாக் பேசுது.
"அடிக்கிற இடமா?"
"ஆமாம், டீ அடிக்கிற இடமாம்"
"(சிரிப்புடன்) அது சரி. அப்புறம் சூர்யாவை பத்தி சொல்லுங்க"
"அந்த தம்பியோட லூட்டியும் யாருக்கும் சளைத்ததில்லை. அன்னைக்கு பரீட்சை வைச்சேன். இந்த தம்பி மட்டும் கையில, கால்லன்னு உடம்பு முழுக்க, பாடம் சம்பந்தமா நிறைய எழுதி வைச்சிக்கினு வந்துச்சு"
"ஐயையோ. ஏன்னு கேட்டீங்களா?"
"கேட்டேனே. பரீட்சைன்னு வந்தா மட்டும் அந்த தம்பிக்கு ஏதோ ஷார்ட் டெர்ம் மெமரி லாஸ் மாதிரி வந்திடுதாம். மொதநாள் நைட்டு முழுசும் படிச்சதெல்லாம் அடுத்த நாள் காலையில பரீட்சைக்கு வரும்போது ஞாபகம் இருக்க மாட்டேங்குதாம். அதனால தான் இந்த மாதிரி உடம்பெல்லாம் எழுதிகிட்டு வருதாம்"
"அதுக்கு நீங்க என்ன சொன்னீங்க?"
"தம்பி உங்கப்பாதானே பக்கத்து கிளாஸ¤க்கு வாத்தியாரு. அவருகிட்ட சொல்றேன். அப்போ உனக்கு மெமரி லாஸ் வருதான்னு பார்ப்போன்னு சொன்னேன். உடனே சமத்தா எல்லாத்தையும் அழிச்சிக்கினு வந்து ஒழுங்கா பரீட்சை எழுதிச்சு"